4633. ஊற்றை உடம்பில் இருட்டறைவாய்
உறங்கி விழித்துக் கதைபேசி
உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே
உதவா எருதின் ஊர்திரிந்து
நேற்றை வரையும் வீண்போது
போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
நேரே இற்றைப் பகல்அந்தோ
நெடுங்கா லமும்மெய்த் தவயோக
ஆற்றை அடைந்தோர் எல்லோரும்
அச்சோ என்றே அதிசயிப்ப
அமுதுண் டழியாத் திருஉருவம்
அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
பேற்றை உரிமமப் பேறாகப்
பெற்றேன் பெரிய பெருமான்நின்
பெருமை இதுவேல் இதன்இயலை
யாரே துணிந்து பேசுவரே.
உரை: அழுக்குப் பொருந்திய உடம்புகொண்டு இருள் நிறைந்த அறையிற் கிடந்து உறங்கிப் பின் விழித்தெழுந்து வீணான கதைகளைப் பேசி, உண்பனவுண்டு உடையுடுத்து உயர்ந்த கருத்தின்றி உழவுக் குதவாத ஊர் ஏறாய் எங்கும் திரிந்து நேற்று வரையில் வீண் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தேன்; நல்வழி யொன்றும் அறிந்திலேன்; நேர்முகமாக இன்று பகற்போதில்தான் நெடுங்காலம் தவயோக நெறியை மேற்கொண்டு ஒழுகிய பெருமக்கள் யாவரும் கண்டு அதிசயிக்குமாறு திருவருள் ஞான வமுதத்தையுண்டு என்றும் பொன்றாத திருவுருவம் எய்தினேன்; பெரிய அருட் பெருஞ் சோதியாகிய ஞானச் செல்வத்தை எனக்கே யுரியதாகப் பெற்றேன்; பெரிய பெருமானாகிய சிவனே, நின்னுடைய பெருமை இதுவாயின், இத்திருவருட் சோதி நலத்தை யாவரே தெளிந்து மறுத்துப் பேசுவர். எ.று.
ஊற்றை - அழுக்கு; உடம்பின்கண் ஊறுவது பற்றி, ஊற்றை எனப்படுகிறது; இதனை “ஊத்தை” என்றும் வழங்குவர். கதை-வீண் பேச்சு. உதவா எருது - ஊர்க்காளை; பொலி காளையெனவும் வழங்கும். இதனை, “ஆள்வாரிலி மாடாவேனோ” என்றும், “கண் கெட்ட ஊரேறாய் இங்குழல்வேனோ” என்றும் மணிவாசகர் குறிப்பது காண்க. நெறி-திருவருள் ஞான நெறி. தவயோக ஆறு, தவயோக ஞான வொழுக்கம். தாம் இவ்யோகப் பயனை எய்த முடியவில்லையே என்று வியக்கின்றார்கள் என்பார், “எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப” எனக் கூறுகின்றார். அமுது என்றது திருவருள் ஞானம். அமுத முண்டின் பயனாகத் தமது திருமேனி பொன்போல் ஒளிகொண்டமை விளங்க, “அழியாத் திருவுருவம் அடைந்தேன்” என்றும், திருவருட் சோதியின் விளைவு அதுவாதல் தோன்ற, “பெரிய அருட் சோதிப் பேற்றை உரிமையாகப் பெற்றேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். பிறரைக் கேட்டுப் பெறாமல் தானே எய்தப் பெறுவதனால், “உரிமைப் பேறாகப் பெற்றேன்” என வுரைக்கின்றார். பெரிய பெருமான் என்றாற்போல மாணிக்க வாசகர், “பெரிய எம்பெருமான்” (பிடித்த) எனப் புகழ்ந்துரைப்பர். நேற்றுவரை நெறியறியாது வீண் போது போக்கியிருந்த தமக்குப் பிற்றை நாட் பகலில் திருவருட் சோதியுணர்வும், அதற்குரிய பொன்னுருவும் அளித்தருளிய செயலை, “நின் பெருமை இதுவேல்” என்றும், இனி நின் திருவருள் ஞான இயலை மறுத்துப் பேசுவோர் ஒருவரும் இல்லை என்பாராய், “இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே” என்றும் மொழிகின்றார். வடலூர் வள்ளற் பெருமானது இறுதிநாள் வாழ்வை நேரிற் கண்டோர் பிற்காலத்தோர் அறிந்து மகிழ எழுதி வைத்திலர்; இது நமது தவக் குறை; வேறே ஈண்டு யாதும் உரைப்பதற்குப் புறச் சான்று இல்லை. (9)
|