4636. ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
உரை: மெய்யுணர்ந்த சான்றோருள்ளும் யாவராலும் அறிந்து கொள்ள மாட்டாததாகிய பெருமையை யுடைய பரம்பொருளே! எனக்கு அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசுமாகிய பெருமானே! மழையாலும் தீயாலும் காற்றாலும், வானத்தில் கலையாகத் திகழும் நட்சத்திரங்களாலும் சூரியனும், கடல்களாலும் கடல் சூழ்ந்த நிலவுலகத்தாலும் வேறாகிய படைகளாலும் பிற எவற்றாலும் இயங்காத படி தடுக்கப்படுவதில்லாத தனிவடிவத்தை எனக்களித்த தலைவனே! ஞான சித்திபுரம் என்னும் வடலூரின்கண் எழுந்தருளும் ஞான அமுதமாகிய பெருமானே! என்னைச் சூழ்ந்திருந்த உலகியல் மயக்கம் நீங்கி யொழிந்தது. காண். எ.று.
பரம்பொருளை அறிய விரும்பி முயல்பவர், மெய்யுணர்வு பெற்ற சான்றோர்களாதலால், ஆராலும் என்றற்கு இவ்வாறு பொருள் காணப்பட்டது. பரம்பொருளினும் பெரியது வேறின்மையின், “பெரும் பொருளே” என்று பேசுகின்றார். கார்-மழை. கனல்-நெருப்பு. ககனக் கலை - விண்மீன்கள். கதிர் - சூரியன். படை, ஆக்கத்துக் குதவாது அழிவுக் குதவும் படைக்கலம். படை என்றதனால். காடு மலை முதலிய அரன்களும் கொள்ளப்படும். தனி வடிவம், பொன்னிறம் கொண்ட திருவருள் ஞான தேகம். இத்தேகம் பஞ்ச பூத பரினாமமாகிய தேக மன்மையாம் கார், கனல் முதலிய பூதங்களாலும் கலைகளாலும் படையரன் வகைகளாலும் தடுக்கப் படாதது என்றற்குத் “தடுக்கப் படுதலிலாத் தனிவடிவம்” என்று சாற்றுகின்றார். சீர் - புகழ். வடலூருக்கு ஞான சித்திபுரம் என்பதும் பெயராதலால், “ஞான சித்தி புரத்தமுதே” எனச் சிறப்பிக்கின்றார். (2)
|