4637. ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
சத்தியனே உண்கின்றேன் சத்தியத்தெள் ளமுதே.
உரை: ஆதியும் அந்தமும் இல்லாத காண்டற் கரிய பெருஞ் சோதி மயமானவனே! எனக்கு அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசுமாகியவனே! எந்த வகையாலும் நூல் முகத்தால் ஓதி யுணர்ந்து கொள்ளுதற் கரியதாய், தன் தன்மை திரியாமல் இயற்கையிலே யுள்ளதொரு பொருளாய், இருப்பவனே! திருவருள் ஞானமாகிய நற்பயனைத் தந்து என்னை ஆண்டுகொண்டு என்னுடைய உள்ளகத்தும் புறத்திலும் நீங்காமல் விளங்குகின்ற என்னை யுடைய தலைவனே! சாதி யென்றும் மதம் என்றும் வாயாற் பேசித் திரிகின்ற சழக்குகள் யாவும் போக்கிய சத்தியப் பொருளாகியவனே! சத்தியத் தன்மையாகிய தெளிந்த அமுதத்தை யுணர்ந்தேற்கின்றேன். எ.று.
சிவ பரம்பொருளை “ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ் சோதி” (திருவாசகம்) என்று பெரியோர் புகழ்வது மரபாகலின். “ஆதியந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே” எனப் போற்றுகின்றார். பல சாத்திரங்களைப் படித்தாலும் உணர்ந்தாலும் பல நுண்ணிய கருவிகளாலும் அறிதற் கரியவனாய் இருத்தலால், “ஓதி எந்த வகையாலும் உணர்ந்து கொள்ளற் கரிது” எனவும், எவ்வாற்றாலும் தன் தன்மை மாறாதது பரம் பொருளாதல் பற்றி, “உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒருபொருளே” எனவும் எடுத்தோதுகின்றார். ஊதியம் - திருவருள் ஞானம். எங்கும் எப்பொருளிலும் கலந்து எப்போதும் இருந்து அவற்றை இயக்குகின்ற முதல்வன் என்பது பற்றி, “உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே” என்று உரைக்கின்றார். உடையவன் - இயக்குபவன். சாதி மதங்களைப் பேசி வம்பும் வழக்கும் புரிந்து மக்களினம் ஒருமை நிலை குன்றிச் சிதறிக் கெடுதலால், “இந்தச் சாதி இந்த மதம் எனும் வாய்ச் சழக்கு” என்றும், சாதி மதங்கள் மக்களால் வகுக்கப்பட்டு நிலையின்றிக் கெடினும் தான் தனது உண்மைத் தன்மை மாறாது திருவருள் செய்தல் தோன்ற, “சழக்கெலாம் தவிர்த்த சத்தியனே” என்றும், நினது தன்மையை நன்கு உணர்ந்து நினது சத்தியத் தன்மையை மேற்கொண்டு ஒழுகுகின்றேன் என்பாராய், “சத்தியத் தெள்ளமுதை உண்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். உண்டல் - ஈண்டு அனுபவித்தல் குறித்து நின்றது. (3)
|