4638. அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
உரை: உளத்தில் தோன்றிய அச்சமெல்லாம் போக்கி விரும்பியவை யெல்லாம் தந்தருளிய அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசுமாகிய சிவனே! கீழ்மையையுடைய உலகத்தில் நிலவும் ஆசார நிராசாரப் போக்குகளை நீக்கிச் சுத்த சன்மார்க்க நெறியே விளங்கச் செய்த சித்த சிகாமணியே! மேன்மை நிலையின் நடுவிடத்தே நின்று திகழும் ஒப்பற்ற தலைவனாகிய பதிப் பொருளே! உலகத்தவர் அனைவரும் திரண்டு வந்து எடுத்தாலும் குறைவதில்லாத செல்வ மாயவனே! இப்பொழுதில் என்பால் எழுந்தருளி எனக்கு இறவாத வரத்தையும், எல்லாம் செயல் வல்ல அறிவின் இயல்பையும் தந்தருளினாய்; ஈதன்றோ நான் பெற்ற பேறு. எ.று.
ஒன்றை விரும்பியவிடத்து, அதனை யடையாவாறு தடுக்கும் தடைகட்கு யாது செய்வது என மனத்தின்கண் நிகழும் அச்சத்தை முதற்கண் போக்கி இச்சித் தவை எனக்கு எய்தச் செய்தாய் என்பாராய், “அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சையெலாம் அளித்த” எனப் புகழ்கின்றார். துச்சம் - கீழ்மை. ஆசாரத் துடுக்கு - ஆசார வொழுக்கமென்ற பெயரால் செய்யப்படும் குற்றங்கள். ஆசாரத்திற்கு மாறானது நிராசாரம். சுத்த நெறி - தூய சன்மார்க்கம். இச் சன்மார்க்கத்தை உலகிற்கு வழங்கும் அறிவை இறைவன் அளித்தானாகலின், “சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே” எனப் போற்றுகின்றார். சித்த சிகாமணி - சிந்தனையின் மூடியில் இருந்து விளங்கும் மணி போன்ற சிவமே. உச்ச நிலை - சுத்த சன்மார்க்கத்தின் உயரிய நிலை. அவ்வுயர்நிலையின் நடுவில் அமர்ந்து அந்நிலை முழுதும் ஒளி செய்தோங்கும் தலைவனாதல் தோன்ற, “உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமைப் பதி” என்று இயம்புகின்றார். யாவரும் தாம்தாம் வேண்டுமளவு கொள்ளினும் குறைபடாத அருட் செல்வமுடைய பெருமானாதலால், “உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே” என வுரைக்கின்றார். உலவுதல் - குறைதல். சித்து - பேரறிவு. அறிவின் பெருமை ஈண்டு இயற்கை எனக்குறிக்கப்படுகிறது. (4)
|