4640.

     அடுக்கியபேர் அண்டம்எலாம் அணுக்கள்என விரித்த
          அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
     நடுக்கியஎன் அச்சம்எலாம் தவிர்த்தருளி அழியா
          ஞானஅமு தளித்துலகில் நாட்டியபேர் அறிவே
     இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக்
          கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே
     முடுக்கியஅஞ் ஞானானந்த காரமெலாம் தவிர்த்து
          முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே.

உரை:

     ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் பெரும் பேரண்டங்களெல்லாம் அணுக்களாகத் தன்னுள் ஒடுங்க விரிந்த எனக்கு அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசுமாக விளங்கும் பரம்பொருளே! என் உள்ளமெலாம் நடுங்கும்படி தாக்கிய துன்பங்கள் யாவற்றையும் போக்கி, கெடுவதில்லாத ஞானமாகிய அமுதத்தை தந்து என்னை இருக்கச் செய்த பேரறிவுமாகிய பெருமானே! தூய பெருந்தகையே! சூழ்ந்து வருத்திய அறியாமையாகிய இருளை நீக்கி முத்தான்மாக்களின் திருவுள்ளத்தில் தோன்றிச் சிறக்கும் தூய பரஞ் சுடரே! மகளிர் இடையில் வைத்து இறுகப் பற்றி வளர்த்த கைப்பிள்ளையைப் போல உடலும் உள்ளமும் அறிவும் சுருங்கியிருந்த சிறியவனாகிய எனக்கு எல்லாம் செய்யவல்ல அறிவாற்றலைத் தந்தருளினாய். எ.று.

     பெரிய பெரிய அண்டங்கள் யாவும், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படுள்ளன எனக் கந்தபுராணம் முதலியன கூறுதலால், “அடுக்கிய பேரண்ட மெலாம்” என்றும், அவையனைத்தையும் அணுவாய்ச் சிறியனவாகத் தன்னுள் ஒடுங்க விரிந்த பரம்பொருள் என்பது பற்றி, “அணுக்கள் என விரித்த” என்றும் இயம்புகின்றார். “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், இன்னுழை கதிரின் துன்னணும் புரையச் சிறியவாகப் பெரியோனே” (அண்டப்) என மணிவாசகர் உரைப்பது காண்க. விரிந்த என்பது “விரித்த” என வந்தது. துன்பம் பயத்தலின், துன்பத்தை “அச்சமெல்லாம்” என இசைக்கின்றார். சன்மார்க்க ஞானம் எக்காலத்தும் அழியா இயல்பினதாகலின், அதனை, “அழியா ஞான வமுது” எனச் சிறப்பிக்கின்றார். நாட்டுதல் - நிலையாக இருக்கச் செய்தல். இடுக்குதல் - இறுகப் பற்றியிருத்தல். அஞ்ஞானாந்த காரம் - அறியாமையாகிய இருள். பேரறிவே, சுத்த பெருந்தகையே, சுத்த பரஞ்சுடரே, எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்தனை என இயைக்க.

     (6)