4646. தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
உரை: அருட் பெருஞ் சோதியாய் என்னை ஆண்டருளிய பெருமானே! எப்போதும் தேகம் கெடாதவாறு செய்தருளி எல்லாம் செய வல்ல சித்திகளைத் தந்து, நுகரத் தக்க போகமனைத்தும் எனது போகங்களாக்கிப் போதாந்தமாகிய சின்மய சிதாகாச வுலகை ஆளும்படி மேனிலைக்கண் என்னை உயர்த்தி வைத்து ஏகமாகிய சிவானந்த வாழ்வில் நான் இன்புற்று வாழும் தன்மையைக் கொடுத்து என்னைச் சித்தாந்தமாகிய சிவாகமங்கள் கூறும் நெறியில் என்னை இருப்பித்தீர்; யான் இதற்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.
உயிர் நீங்கிய உடல் சிறிது போதில் கெட்டுச் சிதையும் இயல்புடையதாதலால், “தேகம் எப்போதும் சிதையாவண்ணம் செய்வித்து” என்று கூறுகின்றார். சித்தி - கன்ம யோக ஞான சித்திகள். போக நுகர்ச்சியே உயிர் வாழ்க்கையாதலின், “போகமெல்லாம் என்றன் போகமதாக்கி” எனப் புகல்கின்றார். போதாந்த நாடு - போதாந்தம் எனப்படும் சின்மய சிதாகாச வுலகு. வேதாந்தம், யோகாந்தம், சித்தாந்தம், கலாந்தம், நாதாந்தம், போதாந்தம் என்ற ஆறனுள் தலையாயது. ஆகமங்கள் உரைக்கும் நாதாந்தத்துக்கு மேலாய்ச் சிந்தையும் மொழியும் செல்லாத நிலைமையதாகிய சின்மய சிதாகாச வுலகாதல் விளங்க, “போதாந்த நாடு” என்று போற்றியுரைக்கின்றார். சித்தாந்த நெறி கூறும் கலாந்தமும், நாதாந்தமும், வேதாந்தம் விளம்பு யோகாந்தமும், “கலையாதி மண்ணந்தம் காணில் அவை மாயை” (சிவ. போக.) என்பது முதலிய நூலறிவு கொண்டு உணரலாமாயினும், போதாந்தம் முத்திப் பேறாய்ச் சிந்தைக்கும் வாக்குக்கும் எட்டாததாகலின், அனுபவ ஞானிகள்பால் கேட்டறிதற்குரியதாம் என வுணர்க. நண்ணரிய சிவானந்தப் பெருவாழ்வாதல் பற்றி, “ஏக சிவானந்த வாழ்க்கை” என்று தெரிவிக்கின்றார். வேத நெறி, ஆகம நெறி இரண்டனுள் வேத நெறியை “ஆரண வீதி” என்றமையின் ஆகம நெறியை “ஆகம வீதி” என வழங்குகின்றார். (2)
|