4647. தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆணவடர் நீரே.
உரை: அருட்பெருஞ் சோதியாய் என்னை ஆட்கொண்டருளிய தெய்வமாகிய நீர், அழிவில்லாத தன்மையை யுணர்த்தும் சாகாத கல்வியை எனக்குத் தந்து என்னுள்ளத்தே தேன் மிக்க தெள்ளமுதமாகிய திருவருள் ஞானத்தை நல்கிப் பெருக்கி உள்ளமெல்லாம் தித்திக்கும்படி செய்து என் சித்தத்தையும் சிவமயமாக்கி வானுலகத் தேவரும் தோற்றமும் கேடும் கண்டறியமாட்டாத அருள் ஞான வாழ்வில் இன்புற்றுச் சுத்த வேதாந்தம் உரைக்கும் இன்ப நெறியில் யான் நிலவச் செய்தீராதலால் இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
எஞ்ஞான்றும் அழிவில்லாததாகலின் கல்வி “சாகாத கல்வி” எனப்படுகிறது; திருவருள் ஞானக் கல்வி தன்னைப் பெற்ற ஆன்மாக்களைச் சாவாத நிலையையுணர்ந்து பெற உதவுவது என்றற்கு, “அந்தமில்லாத தன்மையைக் காட்டும் சாகாத கல்வி” என்று புகழ்கின்றார். திருவருள் ஞானம் இன்புறுத்தும் திறத்தை, “உள்ளே தேன் நந்தத் தெள்ளமுதூற்றிப் பெருக்கித் தித்தித்து” என்றும், அதனால் தனது அந்தக்கரணங்கள் சிவகரணங்களாயின என்றற்குச் “சித்தம் சிவமாக்கி” என்றும் இயம்புகின்றார். நந்துதல் - மிகுதல். சித்தம் - மன முதலிய அந்தக்கரணங்களில் ஒன்று. சித்தத்தை எடுத்தோதினாராயினும் உபலக்கணத்தால் மனம் முதலிய ஏனைய கரணங்களும் கொள்ளப்படும். “சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்” (தோனோக்) என மணிவாசகம் கூறுவது காண்க. வான் - ஆகு பெயரால், வானுலகத்துத் தேவர்களைக் குறிக்கின்றது. தேவருலகத்துக்கு மேன்மேலாய் விளங்கும் சிவலோக போக வாழ்வாதலால் அதனை, “அழியா வாழ்க்கை” எனச் சிறப்பிக்கின்றார். வேதாந்தம் - உபநிடதங்கள். அவை கூறும் பிரமானந்த மார்க்கத்தைச் “சுத்த வேதாந்த ஆனந்த வீதி” என்று இசைக்கின்றார். (3)
|