4648.

     சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
          தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
     பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
          பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
     தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
          சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
     அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
          அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

உரை:

     அருட்பெருஞ் சோதியாய் என்னை ஆண்டருளிய பெருமானாகிய நீர், ஞான சபையில் நிகழ்த்தும் நினது இன்ப மயமான திருநடனத்தை யான் காணக் காட்டி நினது சிவஞானமாகிய தெள்ளமுதத்தை எளியேனை உண்ணச்செய்து என் சிந்தையைத் தெளிவுடையதாக்கிப் பொற் சபையின்கண் என்னைப் பொருந்த இருப்பித்து எல்லாம் செயல்வல்ல பூரண சித்திகளையும், மெய்ம்மையான சிவபோகத்தையும் எனக்கு நல்கித் தற்பரமாகிய சதானந்தம் நிலவும் இடத்தில் என்னை உள்ளவனாகச் செய்தருளி சுத்த சித்தாந்தம் கூறும் அற்புத நெறியில் நிற்கச் செய்தருளினீராதலின், இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     சிற்சபை - ஞானசபை. நடனக் காட்சியில் ஊறிய இன்பானுபவத்தைத் “தெள்ளமு தூட்டி” என்று இயம்புகின்றார். தேற்றுதல் - தெளிவித்தல். பொற்சபை - பொன் வேயப்பட்ட சபை. மூவகைச் சித்திகள் முழுதும் எய்தினமை விளங்கப் “பூரண சித்தி” எனப் புகல்கின்றார். சிவானந்தம் - மெய்ப்போகம் என்று போற்றப்படுகிறது. சதானந்தம் - மெய்யான இன்பம். சுத்த சித்தாந்தம் - சிவாகமங்கள்.

     (4)