4649. தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
உரை: அருட்பெருஞ் சோதியாய் என்னை ஆண்டுகொண்ட பெருமானாகிய நீர், தத்துவம் முப்பத்தாறையும் என் வசம் நிற்க வைத்து எனக்குச் சாகா வரத்தையும் தந்து என் மனத்தையும் தெளிவித்து, திருவுளம் இசைந்து வந்து என் உள்ளத்திலே கலந்து கொண்டு எல்லா வுலகத்தவரும் போற்றுமாறு என்னை உயர்நிலையில் வைத்து மூவகைச் சித்திகளையும் நான் செய்யச் செய்து அதனால் சத்துப் பொருளும் சித்துப் பொருளும் விளங்க வைத்து சுத்த நாதாந்தமாகிய அந்த நெறியில் என்னை நிலவச் செய்தீராதலால் இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.
ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்தும் ஆகத் தத்துவம் முப்பாத்தாறு என அறிக. முப்பத்தாறுக்கும் மேலுள்ளது நாதாந்தம் என அறிக. பிறத்தலும் இறத்தலும் பிறப்பெடுத்த ஆன்மாவுக்கு இயல்பாதலால், சாகா வரப் பேறு வியப்பையும் கலக்கத்தையும் தந்தமை புலப்பட, “எனைத் தேற்றி” என்றும், மேலும் ஊக்கம் கெடா வகையில் திருவுள்ளம் இசைந்து இறைவன் எழுந்தருளி உள்ளத்தில் கலந்து கொண்டான் என்பாராய், “ஒத்து வந்து உள்ளே கலந்து கொண்டு” என்றும், பின்னர் எல்லா வுலகத்தாரும் விரும்புகின்ற திருவருள் ஞானநிலையாகிய உயர்நிலையில் உயர்த்தினான் என்பாராய், “எல்லா உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றி” என்றும் உரைக்கின்றார். கன்ம யோக ஞான சித்திகளைக் குறைவறச் செய்வித்து சத்தாகிய சிவத்தின் ஞானமும் சித்தாகிய ஆன்ம ஞானமும் தமக்கு விளங்கச் செய்தருளினார் என்பதை உணர்த்துதற்கு, “சத்தும் சித்தும் வெளிப்பட” எனவும், அதன் பயனாகத் தத்துவாதீதமாகிய நாதாந்த நிலையில் தம்மை உலாவச் செய்தார் என்பாராய் வடலூர் வள்ளல், “சுத்த நாதாந்த அத்திரு வீதியில் ஆடச் செய்தீர்” எனவும் மொழிகின்றார். இது பெறலரும் பேறாதலின் இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன் எனக் குறிப்பெச்சத்தால் உய்த்துணர உரைக்கின்றார். (5)
|