4650.

     இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
          என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
     சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
          தந்தெனை யாவரும் வந்தனை செயவே
     நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
          நீதியை ஓதிஓர் சுத்தசன் மார்க்க
     அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
          அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

உரை:

     அருட்பெருஞ் சோதியாய் என்னை ஆண்டு கொண்ட பெருமானாகிய நீவிர், ஒருபால் ஒன்றி நினைந்து செய்த பிழைகள் இத்தனை என்று எண்ணமுடியாத அளவில் பெருகியிருக்கும் என் பிழைகள் யாவற்றையும் அன்பினால் பொறுத்துக்கொண்டு உண்மை வடிவாகிய சிவஞான சித்தியை என்பால் அளித்து அதுபற்றி என்னை யாவரும் வழிபாடு செய்யுமாறு நித்தியனாக்கி மெய்ம்மையான சுத்த சன்மார்க்க நீதியை அறிவித்து சுத்த போதாந்தமாகிய அந்த ஒப்பற்ற நிலையில் வாழச் செய்தீராதலால் இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     மனம் ஒன்றியிருந்து எண்ணினாலன்றித் தான் செய்த பிழைகள் இவையென்று அறிய முடியாது இவ்வகையில் தான் செய்துள்ள பிழைகள் அளவிறந்தன என்று விளக்குதற்கு, “இத்தனை யென்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை” எனவும், அப்பிழைகளை யன்போடு பொறுத்துத் திருவருள் ஞானத்தை இறைவன் தமக்குத் தந்தார் என்பாராய், “அன்பினில் கொண்டு சத்தியமாம் சிவசத்தியை என்பால் தந்து” எனவும், அதனால் தம்மை எத்திறத்தோரும் போற்றி வழிபடுமாறு நித்தனாக்கினான் சிவபெருமான் என மொழிவாராய், “என்னை யாவரும் வந்தனை செயவே நித்தியனாக்கி” எனவும், சுத்த சன்மார்க்க நீதி தன்னை ஓதியுணர்ந்து ஒழுகுபவரைச் சுத்த போதாந்தத்தில் செலுத்தும் என்பது பற்றி, “மெய்ச் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த அத்தனி வீதியில் ஆடச் செய்தீர்” எனவும் எடுத்துரைக்கின்றார்.

     (6)