4651. மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய்
வகைஇது துறைஇது வழிஇது எனவே
இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே
என்னையும் தன்னையும் ஏகம தாக்கிப்
பொருந்திஎ லாஞ்செய வல்லஓர் சித்திப்
புண்ணிய வாழ்க்கையில் நண்ணியோ காந்த
அருந்தவ வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
உரை: அருட்பெருஞ் சோதியாய் என்னை ஆண்டு கொண்ட பெருமானே! மருந்து இது மணி யிது மந்திரம் இது, இவற்றைக் கொண்டு செய்வனச் செய்யும் வகை யிது, அதற்குரிய துறை யிது, அதனை யடையும் வழி யிது வென்று என்னுள் இருந்து எனக்கு அறிவித்து, தெள்ளமுதமாகிய திருவருளையும் எனக்கு வழங்கி என்னையும் தன்போல் சிவமாக்கி, என்னோடு பொருந்தி எல்லாம் செய்ய வல்ல சித்திகள் நிறைந்த புண்ணிய வாழ்க்கையில் அமர்ந்து யோகாந்தமாகிய அரிய தவநெறியில் என்னை இயலச் செய்தீராதலால் யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
முத்தி மார்க்கத்திற்குரிய மணியும் மந்திரமும் மருந்தும் இவையென்றும், மருந்து செய்யும் முறை யிதுவென்றும், மணி பெறுதற்குரிய இடம் இதுவென்றும், மந்திரம் ஓதுதற்குரிய முறை யிது வென்றும், ஆன்மாவினுள் அறிவுக் கறிவாய்ப் பொருந்தி அறிவித்ததோடு அவை பயன்படுமாறு தனது திருவருள் ஞானத்தையும் நல்கி என்னையும் தன் போல் சிவமாக்கினான் என்பாராய், “மருந்திது மணி யிது மந்திரம் இது செய்வகையிது துறையிது வழியிது எனவே இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே என்னையும் தன்னையும் ஏகமதாக்கி” என்று கூறுகின்றார். மணி என்பது அக்குமணி. மந்திரம் - பிரணவத்தோடு கூடிய பஞ்சாட்சரம் என்பர். மருந்தாவது திருநீறு. துறை என்றது மணியும் மருந்தும் கிடைக்குமிடம். வழியென்பது மருந்தும் மணியும் மந்திரமும் பயன்படும் திறம் குறித்து நின்றது. தெள்ளமுது என்றது திருவருள் சிவஞானத்தை. சிவம் ஏகப் பொருளாதலின் ஆன்மாவாகிய என்னைச் சிவமாக்கி என்னோடு ஒன்றி எல்லாம் செயல்வல்ல சித்திகள் நிறைந்த வாழ்க்கையில் செலுத்தினார் என்றற்கு, “எல்லாம் செய வல்ல ஓர் சித்தி புண்ணிய வாழ்க்கையில் நண்ணி” என்று புகல்கின்றார். சித்திகள் நிறைந்த புண்ணிய வாழ்க்கையில் எல்லாம் வல்ல சித்திகள் நிறைவது தவயோக நெறியாதலின், அதற்கு அந்தமாகிய சிவயோக நிலை, “யோகாந்த அருந்தவ வீதி” என்று சிறப்பிக்கப்படுகின்றது. இங்கே வடலூர் வள்ளல் குறிக்கும் தவயோக நெறி சிவாகமங்களில் யோகாபாதத்தில் கூறப்படுவது என்றும், யோகாபாதத்தை யுணர்த்தும் ஆகம நூல்கள் கிடைப்ப தருமை யென்றும் அறிந்தோர் கூறுகின்றனர். (7)
|