4652. பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி
நிதிசார நான்இந்த நீள்உல கத்தே
நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து
திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற
சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த
அதிகார வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
உரை: அருட் பெருஞ் சோதியாய் என்னை ஆண்டு கொண்ட பெருமானே! பதிப் பொருளாகிய சிவத்தின் இயல்புணர்ந்து அதனை யடையும் விருப்பத்தை முற்பட எனக்கு உண்டாக்கி, பசுவாகிய ஆன்மாவின் இயல்புகளை உணர்த்திப் பாசங்களைப் போக்கிக் கொள்ளும் பக்குவத்தை நான் உடையவனாமாறு செய்து செல்வத்தையே வாழ்வின் சாரமாகக் கொண்ட இந்த நெடிய உலகத்தில் நான் நினைத்தவை யாவும் எனக்கு நேர்பட அருளி மன்னுயிர்கட்கு நிலைத்த வாழ்வு பெற்று இன்பம் நுகர்விக்கின்ற சித்திகள் அனைத்தையும் தந்து கலா தத்துவத்தின் அந்தமாகிய சுத்த தத்துவ அதிகார நிலையில் என்னை இயங்கச் செய்தீராதலால் இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
பதிப்பொருளின் பொதுவும் சிறப்புமாகிய இயல்புணர்ந்தாலன்றி அதனை அடையும் விருப்பம் பிறவாதாகலின், முதற்கண் “பதிசார வைத்து” என்றும், பதியை அடைதற்குரிய ஆன்மாவுக்கு அதன் கேவல சகல சுத்த நிலைகளை விளக்கினமை புலப்பட, “பசுநிலை காட்டி” என்றும் கூறுகின்றார். பதி - சிவம்; பசு - ஆன்மா. பாச விமோசனம் - ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களின் நீங்குதல். இம்மூன்றையும் பாசம் என்பர். பக்குவன் - பக்குவமுடையவன். பக்குவனாக்குதலாவது சத்தினிபாதமுற்று, இருவினை யொப்புடையனாகி மலநீக்கத்துக்குரிய பரிபாகம் பெறுவித்தல். அது மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்ற நால்வகைப் பக்குவங்களைக் கொண்டதாதலால், “பக்குவனாக்கி” எனப் பகர்கின்றார். சகல நிலையிற் பொருளே உலகியல் வாழ்வுக்கு இன்றியமையாத பண்பாதல் பற்றி, “நிதி சார நீள் உலகம்” என வுரைக்கின்றார். நினைந்தவற்றை நினைந்தாங்கு நிகழப்பெற்றது தோன்ற வள்ளற்பெருமான், “நினைத்தன நினைத்தன நேருற” எனக் கூறுகின்றார். திதி - ஈண்டு உலகில் வாழ்தலைக் குறித்தது. எவ்வுயிரும் இனிது வாழ உதவுவன சித்திகள் என்பது புலப்படுத்துவாராய், “திதி சேர மன்னுயிர்க் கின்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து” எனத் தெரிவிக்கின்றார். கலா தத்துவத்து நிலைக்கு அந்தம் சுத்த தத்துவம்; சுத்த தத்துவங்களில் “சத்தி தத்துவத்திற் புவன ரூபமாகிய நிவர்த்தி முதலிய பஞ்ச கலைகட்கு” அந்தமாகிய கலாந்தம் எனக் கூறுவதுமுண்டு. சுத்த மாயையை இடமாகக் கொண்டு இயலும் சிவத்தின் இலயம் போகம் அதிகாரம் என்னும் நிலையில் அதிகாரம் இயங்கும் சுத்த நிலை பற்றி, “கலாந்த அதிகார வீதி” எனக் கூறுகின்றார். இவற்றின் விரிந்த இயல்புகளைச் சித்தாந்த நூல்களிற் காண்டல் வேண்டும். (8)
|