4653. இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்தசன் மார்க்கம் தொன்றே
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
உரை: அருட்பெருஞ் சோதியாய் என்னை ஆண்டு கொண்டு ஆண்டவராகிய நீர், அறியாமையைச் செய்யும் மலகன்மங்களைப் போக்கி இகமும் பரமுமாகிய வாழ்வியலை நோக்கி உயிர்கள் யாவையும் இன்பமாக வாழவும், மயக்கத்தை விளைவிக்கும் பற்பலவாகிய மார்க்கங்கள் யாவும் தத்தம் நெறியும் துறையும் கெட்டு மறைந்தொழியவும், விளக்கம் பொருந்திய சுத்த சன்மார்க்க மொன்றே சிறந்து விளங்கவும், சிற்சபையை நிறுவி அருள் புரிந்தொழுகும் நன்னெறியில் எங்களை இயங்கச் செய்தீராதலால், இதற்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.
அறிவுருவாகிய உயிரின் அறிவொளியை மறைத்தலால் ஆணவ மலத்தை, “இருளான மலம்” என்று கூறுகின்றார். இகம் - இவ்வுலக வாழ்வு. பரம் - மேலுலக வாழ்வு. எல்லா வுயிர்களும் இன்பம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டனவாதலால், “எல்லா வுயிர்களும் இன்புற்று வாழ” என வுரைக்கின்றார். இன்ப நாட்டத்தை எளிதிற் கைகூடாதவாறு வேறு நெறியிற் செலுத்தி உயிர்கட்குத் துன்பத்தைக் காட்டும் நெறிகள் வேண்டப்படுவன அல்ல என்பாராய், “மருளான பற்பல மார்க்கங்களெல்லாம் வழி துறை தெரியாமல் மண் மூடி போக” என மறுக்கின்றார். மண்மூடி மறைந்தொழியாவிடின் தீநெறிகள் மிகுந்து துன்பம் விளைக்கும் என்பது கருத்து. தெருள் - விளக்கம். சன்மார்க்கம் இன்பமே பயப்பதாகலின், “சுத்த சன்மார்க்கம்” எனப்படுகிறது. சுத்தம் - துன்பம் கலவாதது. “அசுத்த மாயை” என்பதற்குச் சிவஞான பாடியம் கூறும் உரை காண்க. சிற்சபை - ஞானசபை. சிற்சபை உணர்த்துவது தயாமூல தன்மமாதலால் அதனை, “அருளான வீதி” என விளங்கத் தெரிவிக்கின்றார்; அஃதாவது அருள்நெறி என்பதாம். (9)
|