86. திருவருட் பெருமை

    அஃதாவது, திருவருள் ஞானம் தமக்கு எய்தினமையை வியந்து அதனைச் சோதியாகச் சிறப்பித்து அதனால் விளைந்த பெருமிதத்தால் அதனை நல்கிய சிவ பரம்பொருளை வாழ்த்தி வழிபடுதல் என்பதாம். பெருமிதமுற்றுப் பாடுவது பெருமை எனப்படுகிறது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4655.

     அன்பனே அப்பா அம்மையே அரசே
          அருட்பெருஞ் சோதியே அடியேன்
     துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
          சுகத்திலே தோற்றிய சுகமே
     இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
          என்னுளே இலங்கிய பொருளே
     வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
          வழங்கினை வாழிநின் மாண்பே.

உரை:

     எனக்கு அன்பனும் அப்பனும் அம்மையும் அருளரசும் அருட்பெருஞ் சோதியுமாகிய பெருமானே! அடியேனுடைய துன்பமெல்லாம் போக்கிய துணைவனே! ஞான வின்பத்திலே தோன்றிய சுகப் பொருளே! எனக்கு இன்பம் தருபவனே! எல்லாம் செய்யவல்ல சித்துப் பொருளாய் என் உள்ளத்திலே விளங்குகின்ற பரம்பொருளே! வன்கண்மை யுடையவனாகிய என்னுடைய பிழைகளைப் பொறுத்தருளித் திருவருள் ஞானமாகிய அருட் சோதியை எனக்கு நல்கினாயாதலால் நின்னுடைய மாண்பு வாழ்க. எ.று.

     அன்புக்குரியவனை “அன்பன்” என்று போற்றுகின்றார். திருவருள் மெய்ஞ்ஞானத்தின் பெருவிளக்கமாய் இலகுவது சிவ பரம்பொருளாதலால் அதனை, “அருட் பெருஞ் சோதி” என்று போற்றுகின்றார். துன்பமனைத்தையும் துடைத் தொழிப்பது துணைவன் கடனாதலின், “துன்பெலாம் தொலைத்த துணைவனே” என்று சொல்லுகின்றார். பொன்னாலும் பொருளாலும் கல்வியாலும் உண்டாகும் சுகங்களுக் கெல்லாம் தலையாவது மெய்ஞ்ஞான அனுபவத்தில் தோன்றுகின்ற சுகானுபவமாகலின், “ஞான சுகத்திலே தோற்றிய சுகமே” என்று விளம்புகிறார். இன்பம் செய்பவனை “இன்பன்” என்று உபசரிக்கின்றார். சித்துப் பொருள் - அறிவுருவாகிய பரம்பொருள். வன்பன் - வன்கண்மை யுடையவன். அன்புக்கு மறுதலை வன்பு. அருட் சோதித் திருவருள் ஞானம் ஒளி மிக்குத் திகழ்வதாகலின், “அருட் சோதி” என அறிவிக்கின்றார். அதனை வழங்குவதினும் மாண்புடைய செயல் பிறிதின்மையால், “அருட்சோதி வழங்கினை” ஆகவே “நின் மாண்பு வாழ்க” என்று வாழ்த்துகின்றார்.

     (1)