4657.

     எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
          என்னிரு கண்ணினுள் மணியே
     இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
          இணையிலா என்னுடை அன்பே
     சொந்தநல் உறவே அம்பலத் தரசே
          சோதியே சோதியே விரைந்து
     வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
          வழங்கினை வாழிநின் மாண்பே.

உரை:

     எனக்குத் தந்தையும் குருபரனும் என் உயிர்க்கு உயிரும் என்னுடைய இரண்டு கண்களிலும் விளங்குகின்ற மணியும் சந்திரனிடத்துச் சுரக்கின்ற அமுதமும் என் உயிர்க்குத் துணையும் ஒப்பில்லாத என்னுடைய அன்பும் சொந்த உறவுமாகிய பெருமானே! அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே! சோதியுருவாகிய பரம்பொருளே! என்பால் விரைந்து வருகவென்று வேண்டினேனாக வேண்டியாங்கு வந்தருளி அருட்சோதியை வழங்கினாயாதலால் நின் மாண்பு வாழ்க. எ.று.

     செய்த தவத்துக்கேற்ப முன்னிலையிலும் படர்க்கையிலும் குருவாய் எழுந்தருளி ஞானம் வழங்குவது சிவத்தின் திருவருட் செயலாதலால், “என் குருவே” என்றும், உயிர்க்குள் உணர்வாய் அறிவு வழங்குதலின் இறைவனை, “என் உயிர்க் குயிரே” என்றும், இயம்புகின்றார். காணும் கண்ணினுள்ளிருந்து காட்சி நல்கும் கருமணியைக் “கண்ணினுள் மணியே” என்று கட்டுரைக்கின்றார். இந்துறும் அமுது - சந்திரனிடத்துச் சுரக்கின்ற அமுது. ஊறும் என்பது உறும் என்று வந்தது. சந்திரனிடத்து அமுதம் உண்டென்றும் அதனால் அது மதி எனப்படுகிறது என்றும் தமிழறிஞர் கூறுவர். யோகியர்கள் தலையின் உச்சிக்கு மேல் துவாத சாந்தத்தில் தோன்றுகின்ற அமுத சந்திரனிடத்தில் தோன்றும் ஞானமுதத்தை உண்பர் என யோக நூலார் கூறுவர். தனது அன்பின் பெருக்கத்தையுணர்த்துதற்கு, “இணையிலா என்னுடை அன்பே” என வுரைக்கின்றார். இணை - ஒப்பு. அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தப் பெருமானுடைய கூத்து அருட் கூத்தாதலின் அருளரசன் சிறப்பு விளங்க, “அம்பலத்தரசே” என்று போற்றுகின்றார். அருள் நிலையால் கூத்தப் பெருமானாய்க் காட்சி அளிப்பினும் பரசிவமாய் ஒளியாய் விளங்குதலின், “சோதியே சோதியே விரைந்து வந்தருள்” என வேண்டினார் என அறிக.

     (3)