4658. கோஎன எனது குருஎன ஞான
குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
பூஎன அதிலே மணம்என வணத்தின்
பொலிவென வயங்கிய பொற்பே
தேவெனத் தேவ தேவென ஒருமைச்
சிவம்என விளங்கிய பதியே
வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
உரை: எனக்குத் தலைவன் எனவும், குருபரன் எனவும், ஞான குணமூர்த்தி எனவும் விளங்குகின்ற சிவக் கொழுந்தே! பூ எனவும் அதில் எழுகின்ற மணம் எனவும் நிறத்தின் பொலிவு எனவும் விளங்குகின்ற அழகாய் இருப்பவனே! தேவு எனவும் தேவதேவு எனவும் ஒன்றாகிய சிவம் எனவும் விளங்குகின்ற பதிப் பொருளே என வேண்டினேனாக, என்பால் வந்து அருட் சோதியை அளித்தாய்; ஆகவே நின் மாண்பு வாழி. எ.று.
கோ - தலைவன். குரு - ஞானம் அருள்பவன். ஞான குணம் - ஞானமெல்லாம் திரண்ட குண வடிவம். பூவும் அதன் மணமும் அதன் பல்வகை நிறமும் அழகு செய்வதால், “பொலிவு என வயங்கிய பொற்பே” எனச் சிறப்பிக்கின்றார். தேவு - தேவன்; தெய்வம் எனினும் பொருந்தும். ஒருமைச் சிவம் - ஒன்றாகிய சிவம். (4)
|