4659.

     உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
          ஒருவளே உலகெலாம் அறியத்
     தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
          சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
     கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
          கடவுளே கனகஅம் பலத்தென்
     வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
          வழங்கினை வாழிநின் மாண்பே.

உரை:

     என் உள்ளத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு என்னை ஆண்டுகொண்ட ஒப்பற்ற பரமனாகிய சிவனே! உலகத்தவர் எல்லாரும் அறியும்படித் தெளிந்த ஞான அமுதத்தைக் கொடுத்து “உன்னை வாழ்விப்போம் : அதனால் நீ மனம் அஞ்சுதல் ஒழிக” என்று உரைத்தருளிய சிவ பரம்பொருளே! கள்ளம் சிறிதும் இல்லாத கருணையாகிய பெரிய செல்வமே! கடவுளே! பொன்னம்பலத்தில் காட்சி தருகின்ற வள்ளலே என்று வேண்டினேனாக, என்பால் வந்தருளி அருட்சோதி வழங்கினாய்; ஆகையால் நின் மாண்பு வாழ்க. எ.று.

     ஒருவன் - ஒப்பற்றவன். தெளிவு நல்கும் சிறந்த இயல்பினதாதலால் சிவஞானத்தைத் “தெள்ளமுது” என்று உரைக்கின்றார். சித்தம் - மனம். கள்ளம் சிறிதுமின்றி எல்லார்க்கும் எல்லாம் வழங்குபவன் என்பது பற்றி, “கள்ளமே தவிர்த்த கருணை மாநிதியே” என்று புகழ்கின்றார். கனக அம்பலம் - பொன்னம்பலம். வள்ளல் - வேண்டினார்க்கு வேண்டியவற்றை வேண்டியாங்கு வழங்குபவன்.

     (5)