4660. நல்லவா அளித்த நல்லவா எனையும்
நயந்தவா நாயினேன் நவின்ற
சொல்லவா எனக்குத் துணையவா ஞான
சுகத்தவா சோதிஅம் பலவா
அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
ஆண்டவா தாண்டவா எல்லாம்
வல்லவா என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
உரை: நல்லவற்றை நல்ல வகையில் அளித்தருளிய நல்லவனே! என்னை அன்பால் விரும்புபவனே! நாயினும் கடைப்பட்ட நான் சொல்லியவற்றிற்குப் பொருளாகியவனே! எனக்குத் துணையாகியவனே! ஞானத்தால் விளையும் சுகப் பொருளானவனே! அருட்சோதி ஆண்டவனே! அம்பலத்தில் எழுந்தருளுபவனே! நல்லவை யனைத்தும் நீ எனக்கு அருளுபவன் அல்லவா; என்னை ஆண்டவனே! திருக்கூத்து ஆடுபவனே! எல்லாம் வல்லவனே என்று வேண்டினேனாக என்பால் வந்து அருட்சோதியை நல்கினாய்; ஆகவே நின் மாண்பு நீடு வாழ்வதாக. எ.று.
நல்லவற்றை நல்ல வழியில் நல்கி நன்மை எய்துவிப்பதால் சிவனை, “நல்லவா அளித்த நல்லவா” என்று போற்றுகின்றார். நயத்தல் - விரும்புதல். நாயினேன் - நாயின் குணம் செயல்களை யுடைய நான். சொல்லவன் - சொற்குப் பொருளாகியவன். அனைத்தும் ஆனவன் அல்லவா என்பது “அல்லவா அனைத்தும் ஆனவா” என வந்தது. இனிக் கிடந்தபடியே கொண்டு, நல்ல வல்லாத ஆசைகளை நல்லனவாகச் செய்தருளுபவனே என வுரைப்பினும் பொருந்தும். தாண்டவன் - கூத்தாடுபவன். எல்லாம் வல்லவன் - அரியவை அனைத்தையும் செய்யும் வல்லமை யுடையவன். என்றேன் - என்று சொல்லி வேண்டினேன். (6)
|