4661.

     திண்மையே முதலைங் குணக்கரு வாய
          செல்வமே நல்வழி காட்டும்
     கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
          கண்ணுற இயைந்தநற் கருத்தே
     உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
          ஒருதனித் தெய்வமே உலவா
     வண்மையே என்றேன் வந்தருட் சோதி
          வழங்கினை வாழிநின் மாண்பே.

உரை:

     திண்மை முதலிய நற்குணம் ஐந்திற்கும் மூலப் பொருளாகிய செல்வமே! நன்னெறியையே காட்டுகின்ற காட்சியாகியவனே! நற்காட்சிக்குரிய நன்மையே கலந்த கண்ணானவனே! கண்ணிடத்தே கலந்தியன்ற கருத்தானவனே! உண்மைப் பொருளே! உண்மைகள் முற்றிலும் உடைய ஒரு தனித் தலைமைத் தெய்வமே! குறையாத வளமை யுருவாயவனே! என்று சொல்லிப் போற்றினேனாக, என்பால் வந்து அருட்சோதி வழங்கி யருளினாய்; ஆதலால் நின் மாண்பு நீடு வாழ்க. எ.று.

     அறிவு நிறைவால் உண்டாகும் நிறை ஈண்டுத் திண்மை எனப்படுகிறது. “நிறை பொறை தேற்றம் நீதி சால்பு” (திருக்கோவை) என்ற ஐந்தையும், “திண்மையே முதலாம் ஐங்குணம்” என்று கூறுகின்றார். கண்மை - கண்ணாம் தன்மை; கண்ணோட்டம் எனினும் பொருந்தும். கண்ணுக்குக் காட்சியுடைமை சிறப்பு என அறிக. காட்சியும் தெளிவும் கருத்தின் மேலவாதலின், “கண்ணுற இயைந்த நற்கருத்தே” என்று கூறுகின்றார். உலவா வண்மை - கொடுக்கக் குறையாத செல்வமுடைமை. வளமை - வண்மை யென வந்தது.

     (7)