4662.

     காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
          கற்பகத் தனிப்பெருந் தருவே
     தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
          சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
     சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
          சித்தியே சுத்தசன் மார்க்க
     வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
          வழங்கினை வாழிநின் மாண்பே.

உரை:

     வெறுப்பை நீக்கிக் கருணையாகிய கனியைப் பழுத்த கற்பகமாகிய ஒப்பற்ற பெரிய மரமாய் நிற்பவனே! தூய்மைத் தன்மையை விளங்குவித்து எனக்குத் துணை புரிந்த சோதி மயமானவனே! தூய்மை யில்லாதவர்க்குத் தூரத்தில் உள்ளவனே! எல்லாம் செயல் வல்ல ஞான சித்தியாகியவனே! சுத்த சன்மார்க்கத்தின் வாய்மையாகச் சிறப்பவனே என்று வேண்டினேனாக என்பால் வந்து நினது அருட்சோதியை நல்கினாயாதலால் நின் மாண்பு நெடிது வாழ்க. எ.று.

     காய்மை - காய்தல்; அஃதாவது வெறுத்தல். கருணையாகிய கனியைப் பழுத்து நிற்கும் கற்பக மரம் என இறைவனைக் கருதிக் கூறுகின்றாராதலால், “கருணையே கனிந்த கற்பகத் தனிப் பெருந்தருவே” என வுரைக்கின்றார். ஞானப் பேற்றுக்குத் தூய்மை ஏதுவும் துணைமை பயனுமாய் இயைதலின், “தூய்மையே விளக்கித் துணைமையே யளித்த சோதியே” என்று சொல்லுகின்றார். திருவருட் சிவஞானம் நிறையப் பெற்றவர் எல்லாம் செய்ய வல்லவராதல் இயல்பு என்பது பற்றி, “எல்லாம் செய வல்ல ஞான சித்தியே” எனத் தெரிவிக்கின்றார். ஞான சித்திக்கு முதல்வனாதலால் சிவனை “ஞான சித்தி” என்று சிறப்பிக்கின்றார். சுத்த சன்மார்க்கம் மெய்ம்மை யறம் என்பது கொண்டு “சுத்த சன்மார்க்க வாய்மையே” என்கின்றார். வாய்மை யுடையதனை “வாய்மை எனக் குறிக்கின்றார்.

     (8)