4664.

     விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
          விளக்கினால் என்னுளம் விளக்கி
     இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
          கென்கருத் தனைத்தையும் புரிந்தே
     சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
          சத்தியைத் தயவினால் தருக
     வரதனே என்றேன் வந்தருட் சோதி
          வழங்கினை வாழிநின் மாண்பே.

உரை:

     விரதங்களையும் நோன்புகளையும் நீக்கி மெய்ம்மை ஞானம் விளக்கத்தால் என் மனத்தை விளக்கம் செய்து இரதமாய் இன்பம் செய்யும் தெளிந்த அமுதம் தந்து இவ்வுலகில் என் கருத்துக்கள் அனைத்தையும் கைகூடச் செய்து உண்மை நிலையில் மெய்யறிவும், எல்லாம் வல்ல சித்திகளையும் தந்தருள்க, வரம் தருபவனே என வேண்டினேனாக என்பால் வந்து அருட் சோதியை எனக்கு வழங்கினாயாதலால் நின் மாண்பு நெடிது வாழ்க. எ.று.

     விரதங்களும் நோன்புகளும் உலகியற் போகங்களுக்கு ஏதுவாதலால் அவை விலக்கப்படுவதுணர்த்தற்கு, “விரத மாதிகளும் தவிர்த்து” என்றும், மெய்ம்மைச் சிவஞானமே வேண்டப்படுதென்றற்கு “மெய்ஞ்ஞான விளக்கினால் என்னுளம் விளக்கி” என்றும் கூறுகின்றார். இரதம் - இனிமைச் சுவை. கருதியவற்றைக் கருதியவாறு கைகூடச் செய்வது விளங்க, “கருத்தனைத்தையும் புரிந்து” என்று உரைக்கின்றார். சரதம் - உண்மை சித்து; ஞானம் - வரதன் - வரம் தரும் பெருமான்.

     (10)