87. அச்சோப் பத்து
அஃதாவது, திருவருள் ஞானம் பெற்று பெருமகிழ்ச்சியில் திளைக்கும் வடலூர் வள்ளல் வியப்பு மிகுதியால் சிவபெருமானை ஆர்வம் மிக்க மொழிகளால் பாடுவதாகும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4665. கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
பெருங்கருணைக் கடலை வேதத்
திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
தெள்ளமுதத் தெளிவை வானில்
ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
உரை: தலைவனும், கண்ணில் மணி போல்பவனும், நெற்றியிற் கண்ணுடைய சிவனும், பெரிய கருணை புரிவதில் கடல் போன்றவனும், வேதத்தால் புகழப்படுகின்ற செம்மையானவனும், சிவமாகிய பதி முதல்வனும், இனிய கனி போல்பவனும், தெள்ளிய அமுதின் தெளிவாக விளங்குபவனும், தேவர்களில் ஒப்பற்றவனும், என் உயிர்க்குத் துணையானவனும், என் உயிர்க்கு உயிரானவனும், உணர்வாகுபவனும், ஞான தேசிகர்களால் உணரத்தப்படுகின்ற ஞானப் பொருளாகுபவனும், சிற்றம்பலத்தில் எழுந்தருளும் அருட் பெருஞ் சோதியுமாகிய பெருமானை எய்தப் பெற்றேன்; என்னே, என்னே. எ.று.
கருத்தன் - தலைவன். நெற்றியிற் கண்ணுடையனாதல் பற்றிச் சிவனைக் “கண்ணுதல்” என்பர். திருத்தன் - சிறந்தவன். வேதங்களால் பராவப்படுதலால், “வேதத் திருத்தன்” என்று புகழ்கின்றார். சிவபதி சிவமாகிய முதற்பொருள். வானில் ஒருத்தன் - வானுலகில் வாழும் தேவர்களில் ஒப்புயர் வில்லாதவன். உணர்வுருவாகிய உயிர்க்கு மெய்யுணர்வு நல்குபவனாதலின், சிவனை, “உயிர்க் குணர்வு” என வுரைக்கின்றார். உணர்த்து அனாதி அருத்தன் - ஞானாசிரியன்மார்களால் உணர்த்தப்படும் அனாதி முத்திப்பொருள். அருத்தம் - பொருள். (1)
|