4666.

     மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
          இதயத்தே விளங்கு கின்ற
     துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
          தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
     செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
          ஒன்றான தெய்வம் தன்னை
     அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
          தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

உரை:

     மெய்ம்மை யுருவானவனும், என் துன்பத்தைப் போக்கிய விமலனும், என் இதயத் தாமரையில் விளங்குகின்ற தூயவனும், மெய்ம்மையான துணைவனும், பெரிய துரியத்தானத்தில் காட்சி தருகின்ற தலைவனும், ஞானானந்தத்தைக் கொடுத்தவனும், சிவந்த திருமேனியை யுடையவனும், வெண்ணிறத்தை யுடைய திருநீற்றை யுடையவனும், என்னுடைய சிவமாகிய பதிப்பொருளும், ஒன்றாகிய தெய்வமும், தலைவனும், சிற்றம்பலத்தில் எழுந்தருளுகின்ற பெருமானுமாகிய சிவ பரம்பொருளின் அருட் சோதியைப் பெற்று மகிழ்கின்றேன்; என்னே! என்னே! எ.று.

     மலத் தொடர்பில்லாதவனாதலால் சிவனை “விமலன்” என்கின்றார். துய்யன் - தூயவன். துரியவத்தைக்கண் யோகியர்க்குக் காட்சி வழங்குவது பற்றி, “துரிய நிலைத் தலைவன்” என்று சொல்லுகின்றார். சிற்சுகம் - ஞானானந்தம். செய்யன் - சிவந்த நிறமுடையவன். வெண்மையான திருநீற்றை அணிந்தவனாதலால் சிவனை, “வெண்ணிறத்தன்” என்று விளம்புகின்றார். சிவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பது பற்றி, “ஒன்றான தெய்வம்” என்று உரைக்கின்றார். ஐயன் - தலைவன். தில்லைச் சிற்றம்பலத்தில் அருட்பெருஞ் சோதியாய் விளங்குவதால், “சிற்றம்பலத்து என் அருட் பெருஞ் சோதி” என்று சிறப்பிக்கின்றார்.

     (2)