4667.

     எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
          விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
     செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
          சிவகதியைச் சிவபோ கத்தைத்
     துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
          துணிந்தளித்த துணையை என்றன்
     அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
          தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

உரை:

     எவ்வுயிரும் எப்பொருளும் எவ்வுலகங்களும் இனிது விளங்க விளக்கம் செய்பவனும், சொல்லுதற் கரிய பெரிய ஒப்பற்ற சிவ முதல்வனும், சிவகதியைத் தருபவனும், சிவபோகத்தை அளிப்பவனும், இவற்றை இனிது முகர எனக்குத் திருவருள் ஞான அமுதத்தைத் தெளிவித்துத் தந்த துணைவனும், எனக்கு அப்பனுமாகிய சிற்றம்பலத்தில் எழுந்தருளும் அருட்பெருஞ் சோதியாகிய இறைவன திருவருளைப் பெற்று மகிழ்கின்றேன்; என்னே! என்னே! எ.று.

     எல்லா உலகங்களும் அவ்வுலகங்களிலுள்ள பொருள்களும் அங்கு வாழ்கின்ற எல்லாவுயிர்களும் நன்கு பயன்பட அருள் புரிகின்றானாதலால், “அவை எல்லாம் விளங்க விளக்கிடுவான்” என்று விளம்புகின்றார். சிவ பரம்பொருளாகிய முதல்வனைப் “பெரிய ஒரு சிவபதி” என்று சிறப்பிக்கின்றார். எல்லா வுயிர்களுக்கும் சிவகதியையும் சிவ போகத்தையும் தருபவனாதலால், “சிவகதியைச் சிவபோகத்தை” என்று தெரிவிக்கின்றார். கதியைத் தருபவனைக் “கதி” என்றும், போகத்தைத் தருபவனைப் “போகம்” என்றும் உபசரிக்கின்றார். துப்புரவு - நுகர்ச்சி. திருவருள் ஞானத்தை அமுதம் என்கின்றாராதலால் அதற்கேற்ப தெளிவித்துக் கொடுத்தருளிய நலத்தைப் பாராட்டி, “துணிந்தளித்த துணை” என்று பாராட்டுகின்றார். துணிதல் -

     (3)