4668.

     பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
          பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
     செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
          பெருங்களிப்புச் செய்தான் தன்னை
     முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
          கொடுத்தெனக்கு முன்னின் றானை
     அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
          தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

உரை:

     பிரிவென்பது சிறிதுமின்றி என் உள்ளத்தில் கலந்து உறைகின்ற பெருந்தகையானவனும், எங்களுக்குப் பெருமானும், என் மனத்துக்கு அடக்கம் முதலிய பண்புகளை அளித்து எனக்கும் பெரிய மகிழ்ச்சியைச் செய்தவனும், கெடுதல் சிறிதுமின்றித் திருவருளாகிய அமுதத்தை யான் உண்ணக்கொடுத்து எளியவனாகிய என் முன் நின்று காட்சி தந்தவனும், அறிவுருவானவனுமாகிய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் அருட்பெருஞ் சோதியாகிய சிவ பரம் பொருளைப் பெற்று மகிழ்கின்றேன்; என்னே! என்னே! எ.று.

     பிரிவு சிறிதுமின்றிக் கலந்து கொண்டமை தோன்ற, “பிறிவனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை” என்று புகழ்கின்றார். பிரிவு என்பது பிறிவு என வந்தது. செறிவு - அடக்கம். அறிவு அருள் முதலிய நல்லுணர்வுகள் எல்லாம் அடங்கச் “செறிவனைத்தும்” என செப்புகின்றார். முறிவு - வெறுத்தொதுக்குதல். அறிவே யுருவாகியவனாதலால் சிவபெருமானை, “அறிவன்” என்று குறிக்கின்றார்.

     (4)