4669.

     பொன்புனைஉள் ஒளிக்கொளியைப் பூரணமாம்
          பெரும்பொருளைப் புனிதம் தன்னை
     என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
          பெருங்கருணை இயற்கை தன்னை
     இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
          பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
     அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
          தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

உரை:

     பொன்னிறம் கொண்ட உள்ளத்தில் ஒளிரும் ஒளிக்கும் ஒளியாய் விளங்குபவனும், முற்ற நிறைந்ததாகிய பெரும் பொருளும், தூய்மையே உருவாகிய பரம்பொருளும், எளியவனாகிய என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருளி என்னையும் ஏற்றுக் கொண்ட பெரிய கருணை யுருவாகிய சம்பு மூர்த்தியும், இன்பமே உருவாகியவனும், என் இதயத்தில் இருந்தருளுபவனும், என் உள்ளத்தில் ஓங்குகின்ற அன்புருவானவனுமாகிய சிற்றம்பலத்தில் எழுந்தருளும் அருட்பெருஞ் சோதியாகிய சிவபெருமானை யான் பெற்று மகிழ்கின்றேன்; என்னே! என்னே! எ.று.

     உள்ளத்தில் காட்சி தரும் ஞானத் திருமேனியை யுடைய சிவ பெருமானது அருளொளி பொன்னின் நிறங்கொண்டு திகழ்தலால், “பொன் புனை உள்ளொளிக்கு ஒளி” என்று உரைக்கின்றார். ஒளிக் கெல்லாம் ஒளியாக ஒளிர்வதாதலால் திருவருள் ஒளியை, “உள்ளொளிக்கு ஒளி” என ஓதுகின்றார். பூரணம் - முற்றவும் நிறைந்த நிறைவு. புனிதன் - தூய்மை. ஏன்று கொள்ளல் - ஆளாக ஏற்றருளுதல். பரம்பொருள் செயற்கையால் உளதாவதன்று என வுரைத்தற்கு, “இயற்கை” என்று இயம்புகின்றார். சிவ பரம்பொருள் இதயத் தாமரையில் எஞ்ஞான்றும் இருந்தருளும் வாழ்வு பெருமை சான்ற வாழ்வாதலால், “இதயத்தே இருந்தருளும் பெருவாழ்வு” என்று பாராட்டுகின்றார். அன்புருவாகிய சிவனை “அன்பு” என உபசரிக்கின்றார்.

     (5)