4670.

     இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
          உடையானை எல்லாம் வல்ல
     சித்தனைஎன் சிவபதியைத் தெய்வம்எலாம்
          விரித்தடக்கும் தெய்வம் தன்னை
     எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
          பெருந்தாயை என்னை ஈன்ற
     அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
          தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

உரை:

     இத்தனையென்று அளவிடற் காகாத சத்திகளையுடையவனும், எல்லாம் செய்ய வல்ல சித்தனும், என்னுடைய சிவபதியும், தெய்வங்களை யெல்லாம் பலவாக மிகுவித்து அடக்கியாளும் தெய்வமாயவனும், என் பிழைகள் எத்தனையாயினும் அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் ஒப்பற்ற பெரிய தாயாய் விளங்குபவனும், எனக்குத் தந்தை யாகுபவனுமாகிய சிற்றம்பலத்தில் காட்சி தரும் அருட்பெருஞ் சோதியைப் பெற்று மகிழ்கின்றேன்; என்னே! என்னே! எ.று.

     இறைவன் சத்திகள் அளவிறந்தனவாதலின், “இத்தனை யென்றிட முடியாச் சத்தி யெலாம் உடையான்” எனக் கூறுகின்றார். சித்தன் - அறிவன். தெய்வ நாயகன் என்றற்கு, “தெய்வமெலாம் விரித்தடக்கும் தெய்வம்” என்று இயம்புகின்றார். மக்கள் செய்யும் பிழைகள் பலவாயினும் பொறுத்துக்கொண்டு அன்பு செய்வதில் தாய் சிறந்தவளாதலின், “தனிப் பெருந் தாய்” எனப் போற்றுகின்றார். “ஈன்ற தந்தை” - பெற்ற தந்தை என்ற பொதுப் பொருளில் வந்தது.

     (6)