4671. எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
இடங்கொண்ட இறைவன் தன்னை
இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
தந்தானை எல்லாம் வல்ல
செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
தெள்ளமுதத் திரளை என்றன்
அம்மையைச்சிற் றம்பலத்தென் அருஞ்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
உரை: எப்பிறப்பிலும் என்னை விட்டுப் பிரியாமல் என் மனத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளுகின்ற இறைவனும், இப்பிறப்பில் எனக்கு அழியாத் திருவுருவத்தைத் தந்தவனும், எல்லாவற்றையும் செம்மையாகச் செய்யவல்ல சித்தனும், என்னுடைய சிவபதியும், அமுதத் திரளாய் இருப்பவனும், எனக்குத் தாயுமாகிய சிற்றம்பலத்தில் காட்சி தரும் அருட் பெருஞ் சோதியை யான் பெற்று மகிழ்கின்றேன்; என்னே! என்னே! எ.று.
எம்மையும் எப்பிறப்பிலும் உயிர்கள் எந்த உடம்பை யெடுப்பினும் உடம்பு வேறுபாடு நோக்காமல் உயிர் தோறும் கலந்து நின்று அருள் புரிவது இறைவன் செயலாதலின், “எம்மையும் என்றனைப் பிரியாது என்னுளமே இடங் கொண்ட இறைவன்” என்று சொல்லுகின்றார். இம்மை - இப்பிறப்பு. தாம் சாகா வரம் பெற்றமை புலப்பட வடலூர் வள்ளல், “என்றனுக்கு அழியாத் திருவடிவம் தந்தான்” என்று தெரிவிக்கின்றார். சிந்திக்கும் தோறும் சிந்தையின்கண் தேனூறுவது பற்றிச் சிவனை, “தெள்ளமுதத் திரள்” என்று சிறப்பிக்கின்றார். அம்மைய். (7)
|