4672.

     என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
          தான்கொண்டிங் கென்பால் அன்பால்
     தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
          களித்தளித்த தலைவன் தன்னை
     முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
          இருந்தமுழு முதல்வன் தன்னை
     அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
          தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

உரை:

     என்னையும் என் பொருள் உயிர் ஆகியவற்றையும் தான் எடுத்துக் கொண்டு என்னிடத்துக் கொண்ட பேரன்பினால் தன்னையும் தன் பொருள் ஆவிகளை மகிழ்வுடன் எனக்குத் தந்தருளிய தலைவனும், எனக்கு முன்பின் பின்னும் முழுத்த துணையாய் நிற்பவனும், முழு முதலாகிய பெருமானும், எனக்கு அன்னையுமாகியவனுமாகிய சிற்றம்பலத்து அருட்பெருஞ் சோதி யாண்டவனை நான் எனக்கு உரியவனாகப் பெற்று மகிழ்கின்றேன்; என் புண்ணியம்தான் என்னே! என்னே! எ.று.

     என்னை என்றது - என்னுடைய உடம்பை என்னும் பொருளதாம். என் உடல் பொருள் உயிராகிய மூன்றையும் தான் கொண்டு எனக்குத் தன் உடல் பொருள் ஆவியைத் தந்துள்ளான் என்றற்கு, “என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு தன்னையும் தன் பொருளையும் களித்தளித்த தலைவன்” என்று கூறுகின்றார். உடல் முதலிய மூன்றையும் கொண்ட போதும் தன் உடல் முதலியவற்றைத் தந்த போதும் அன்பு சிறந்து நின்றமை தோன்ற, “என்பால் அன்பால்” எனவும், “களித்தளித்த” எனவும் இயம்புகின்றார். இக்கருத்து, “தந்த துன்றன்னைக் கொண்ட தென்றன்னைச் சங்கரா யார் கொலோ சதுரர்” என்று மணிவாசகரது பொருளுரை நினைவில் எழுகிறது. இது தன்னைச் சிவமாக்கிய அருட்செயலை விளக்குகின்றது. தான் சிவமாகிய போது தனக்கு அழிவில்லை என்ற உணர்வு தோன்றுவதால், “அழியாத் திருவடிவம் தந்தான்” என்றது வலியுறுகிறது. துணையாகுபவன் முழு முதல்வனாதலால், அவனது துணையும் முழுத் துணையாகிறது.

     (8)