4673. எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணம்எலாம்
தருகின்றோம் இன்னே என்றென்
கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில் அமர்ந்
திருக்கின்ற கருத்தன் தன்னைப்
புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
மெய்இன்பப் பொருளை என்றன்
அண்ணலைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
உரை: வேறு யாதொன்றையும் எண்ணுதல் வேண்டா; இரங்குதல் வேண்டுவதில்லை; நீ எண்ணியதெல்லாம் இப்பொழுது எய்துவிக்கின்றோம் என வுரைத்துக் கண் குளிரத் தன் ஒளியைக் காட்டி என் மனத்தின்கண் அமர்ந்தருளுகின்ற தலைவனும், புண்ணிய மூர்த்தியும், மனத்தின்கண் தேனூற நிற்கின்ற புத்தமுதமாகுபவனும், மெய்ம்மையான இன்பப் பொருளும், என்னையுடைய பெரியவனுமாகிய சிற்றம்பலத்து அருட் சோதியைப் பெற்று மகிழ்கின்றேன்; என் பேறுதான் என்னே. எ.று.
எண்ணுவது எய்துமோ என ஏங்குதலும், இரங்குதலும் வேண்டா என்பவர், தமது உரையை வற்புறுத்தற்கு, “நின் எண்ணமெலாம் இன்னே தருகின்றோம்” என வுரைக்கின்றார். கண்ணைப் பரக்கத் திறந்து நோக்கினமை விளங்கக் “கண் நிரம்ப ஒளி காட்டி” என மொழிகின்றார். கருத்து - மனம். கருத்தில் எழுந்தருளுதலாற் சிவனைக் கருத்தன் என்பது நயம் தோன்ற நின்றது. புண்ணிய வுருவினனாவது பற்றிப் “புண்ணியன்” என்று புகல்கின்றார். கனவும் அன்று, கற்பனையும் அன்று, என்றுமுள்ள மெய்யான இன்பப் பொருள் என்பாராய், “மெய்யின்பப் பொருள்” என விளம்புகின்றார். (9)
|