4674. சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
விடுவித்தென் தன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானைப்
பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
பராபரனைப் பதிஅ னாதி
ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
உரை: சாதியுணர்வும், சமய மதங்களின் பற்றும் ஆகிய எல்லாவற்றையும் துறக்கச் செய்து எளியனாகிய என்னை ஞானம் காட்டும் நீதி வழியாகிய சுத்த சன்மார்க்க நிலையிலே என்னை நிறுத்திய பெருமானும், உமாதேவிக்குத் தனதுருவில் பாதி தந்து பாதியானவனும், அத்தேவியொடு கூடி ஒருவனாகியவனும், பரம்பரனும், பராபரனும், பதிப் பொருளாகியவனும், அனாதியும் ஆதியுமாகியவனுமான சிற்றம்பலத்து அருட் பெருஞ் சோதியைப் பெற்று மகிழ்கின்றேனாகலின், நான் பெற்ற பேறு தான் என்னே. எ.று.
சுத்த சன்மார்க்கத்துக்குச் சாதி சமயக் கட்டுப்பாடு இல்லை யாகலின், “சாதியை நீள்சமயத்தை மதத்தையெலாம் விடுவித்து” என்று சாற்றுகின்றார். ஆன்ம நேயத்தை உரிமைக் கொள்கையாக வுடையதாகலின் சுத்த சன்மார்க்கத்தை, “ஞான நீதியிலே சுத்த சன்மார்க்க நிலையிலே” என்று உரைக்கின்றார். பராபரன் - உயிரினத்துள் மேலும் கீழுமாகிய உயிர் தோறும் உறைபவன். பரம்பரன் - மிகவும் மேலானவன். அனாதி - காரண காரியத் தொடர்பில்லாதது. ஆதி - உயிர் உலகுகள் அனைத்திற்கும் முதல்வன். (10)
|