88. அனுபவ நிலை
அஃதாவது, திருவருள் ஞானத்தால் கருவி கரணங்களின் தன்மைகள் இழந்து தமது சூக்கும தேகம் ஒளி வடிவுற்று ஓங்கக் கண்டு சிவமாம் தன்மையில் தோய்ந்து உரைத்தல்.
கட்டளைக் கலித்துறை 4675. நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்கு கின்றேன்
தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
உரை: தில்லையம்பலத்தில் இருந்தருளுகின்ற ஒரு பெருமை பொருந்திய பெரிய மணியை யான் என் கையில் கொள்ளப் பெற்று நல்ல வாழ்வை எய்தினேன்; எங்ஙனமெனில் தசையொடு கூடிய என் தேகம் ஒளி வடிவுறப் பெற்று நான் உயர்ந்தோங்குகின்றேன்; தேனென இனிக்கும் தெள்ளமுதுண்டு மெய்ம்மை யமைந்த சிவானந்த நிலையைக் கண்டு கொண்டேன்; இதனால் நான் செய்த புண்ணியத்தின் பயனை என்னென்று சொல்லுவேன். எ.று.
சிவபெருமான் சிவந்த மாணிக்க மணி போல் விளங்குவது பற்றி, “வான் செய்த மாமணி” எனப் புகழ்கின்றார். வான் - பெருமை. ஊன் செய்த தேகம் - தோல், தசை, என்பு, நரம்பு ஆகியவற்றால் உண்டாகிய பூத வுடம்பு. சிவயோகத்தால் தமது மேனி ஒளியுற்றமை தோன்ற, “ஒளி வடிவாக நின்று ஓங்குகின்றேன்” என்று கூறுகின்றார். திருவருள் ஞானவின்பம் உள்ளத்தே ஊறித் தேக்கெறிதலால், “தேன் செய்த தெள்ளமுதுண்டேன்” எனவும், அதனால் உளதாகிய சிவ ஞானானந்த அனுபவத்தை, “மெய்த் திருநிலை” எனவும் இயம்புகின்றார். பெறலரும் பேறாதலால் “நான் செய்த புண்ணியம் என்னுரைக்கேன்” என்று தன்மையே
வியந்துரைக்கின்றார். (1)
|