4679. இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும்
கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே
தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே
முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம் முழுதையுமே.
உரை: சிற்றம்பலத்தில் எழுந்தருளும் என் தந்தையே! என்மேல் தனித்த அன்பு செய்யும் தாயே! மூன்றாகிய கண்களையுடைய கற்பகம் போன்றவனே! என்னுடைய இரு கண்களைப் போல்பவனே! எனக்கு இன்பமே செய்யும் இனிய கனியாய் விளங்குபவனே! இனிச் சிறிது போதும் பொறுக்க மாட்டேன்; அதுபற்றி என்னை வெறுக்காமல் மெய்ம்மைச் சிவஞானத்தை முற்றிலும் எனக்கு அளித்தருள்க. எ.று.
தாயன்பு தனிப் பெருஞ் சிறப்புடையதாகலின், “தனியே அன்புடைத் தாயே” எனக் கூறுகின்றார். கற்பகம். - வேண்டினார்க்கு வேண்டிய தளிக்கும் தேவருலகத்து மரம். அக்கற்பகத்தின் வேறுபடுத்தற்கு “முக்கண் கொண்ட கற்பகமே” என்று மொழிகின்றார். சகித்தல் - பொறுத்தல். இடையறவின்றிப் பன்னிப் பன்னி வேண்டுதல் புலப்பட, “முனியேல் அருள்க” என வுரைக்கின்றார். முனிதல் - வெறுத்தல். மெய்ஞ்ஞானம் - சிவஞானம். திருப் பெருகும் இயல்பினதாகலின், “முழுதையுமே” என வுரைக்கின்றார். (5)
|