4680. புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
உரை: என்னுடைய நெஞ்சமே, சிறிதளவும் நீ அறிவு கலங்க வேண்டா; ஞான சபையில் எழுந்தருளும் தந்தையாகிய சிவ பெருமானார், நிலைபேறுடைய சன்மார்க்கத்தில் நம்மைச் செலுத்துகின்றாராதலால், நீ இனிமேல் நன்முத்தியும் நிலைத்த ஞான சித்தியும் பெற்றுச் சிவத்தைக் கூடுவாய்; இது முக்காலும் சத்தியமாம். எ.று.
நெஞ்சினை உணர்வுடைய வேறு பொருள் போலக் கூறுவது புலமை மரபு. சிற்பொது - ஞான சபை. நன்மையே யுடைமை பற்றிச் சிவமுத்தியை, “நன்முத்தி” என்று நவில்கின்றார். நித்தியம் - நிலையுடைமை. நிலைத்த நன்னெறியாதலால், சன்மார்க்கம் “நித்தியம் சேர்ந்த நெறி” எனப்படுகிறது. முயங்குதல் - கூடுதல். (6)
|