4681. கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
வாடிய வாட்டம்எல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்டவனே.
உரை: என்னை ஆண்டவனாகிய பெருமானே! என்னைக் கூடுதற்கு இதுதான் தருணம்; என்னைக் கூடி என் உள்ளத்தே கொண்டிருந்து வருந்திய என் வாட்டமெல்லாம் போக்கிய ஞானானந்த வாழ்வை அளிப்பாயாக; இனியும் காலம் நீட்டிப்பாயேல் நான் சிறிதளவும் பொறுக்க மாட்டாமல் என் உயிரை இழந்து விடுவேன்; அம்பலத்தில் ஆடுகின்ற உன் திருவடி அறிய சொல்லி விட்டேன். எ.று.
கூடுதற் கேற்ற நாளைக் “கூடிய நாள்” என்று கூறுகின்றார். தருணம் - சமயம். சிவயோகம் பெறலாகுமோ என்று ஏங்கிய ஏக்கத்தை, “வாடிய வாட்டம்” என்று உரைக்கின்றார்; நீடுதல் - காலதாமதம் செய்தல். ஆடிய பாதம் - சிவபெருமான் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடிய பாதம். (7)
|