89. அருட் பெருஞ் சோதி அடைவு

    அஃதாவது, அருட் பெருஞ் சோதியாகிய சிவ பரம்பொருளின் திருவருள் ஞானமாகிய அருளமுதத்தை உண்டு நிறைந்த பெருமகிழ்ச்சியால் அதைப் போற்றி வியந்து பாராட்டுவதாம். அடைதல் - அடைவு என வந்தது. அருட் பெருஞ் சோதியை அடைந்து இன்புறல் என்பது கருத்து. “இன்றெனக் கருளி இருள் கடிந்துள்ளத்து எழுகின்ற ஞாயிறேபோன்று நின்ற நின் தன்மை” எனவும், “சோதியாய்த் தோன்றும் உருவமே” எனவும் மாணிக்கவாசகர் கூறுவது ஈண்டுச் சிந்திக்க வேண்டுவதாம். திருவருள் ஞானத்தால் உள்ளத்திற் படிந்த அறியாமையிருளை நீக்கி மனத்தின்கண் உதயஞாயிறுபோல் ஒளிர்வதால் சிவனை “அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார் என வுணர்க. இப்பகுதி அந்தாதித் தொடையில் அமைந்தது.

கட்டளைக் கலித்துறை

4683.

          அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
          அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
          அருட்பெருஞ் சோதித்தெள் ளார்அமு தாகிஉள் அண்ணிக்கின்ற
          அரும்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.

உரை:

     என்னுடைய அருமையான உயிரின்கண் உயிராய்க் கலந்து இயங்குவதும், என் அன்பிற் கலந்து அறிவாய் விளங்குவதும், தெளிந்த அமுதமாய் உள்ளத்தில் இனிப்பதும் ஆகிய அருட் பெருஞ் சோதியாகிய சிவனே! நின்னை அடைதற் குண்டாகிய ஆசை யொன்று தான் எனக்குள் நிறைந்துளது, காண். எ.று.

     அருளொளி நிறைந்தமை பற்றி “ஆருயிர்” என வுரைக்கின்றார். உயிர்க்குயிராய்க் கலந்தியலுதல் சிவத்துக்கு இயல்பாதலால், “அருட் பெரும் சோதி என் ஆருயிரிற் கலந்து ஆடுகின்றது” எனக் கூறுகின்றார். அன்பும் அறிவும் ஓன்றாதலின், “அன்பிற் கலந்து அறிவாய் விளங்கும்” என மொழிகின்றார். அண்ணித்தல் - இனித்தல். உள்ளமெல்லாம் சோதியாய்த் திகழுமாறு புலப்பட, “ஆர்கின்றது” எனத் தெரிவிக்கின்றார்.

     (1)