4685. உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
உரை: வளமிக்க அருட் பெருஞ் சோதியால் ஒளி நிறைந்து எனது மனமாகிய குளத்தின்கண் நிறைந்து அதன் எல்லையையும் கடந்து பெருகிய அருளமுதம் மனம் மகிழ்ச்சியுறுமாறு நறுமணம் மிகுந்து விளங்குகிறது; அதனை, உள்ளத்தில் பெருமகிழ்ச்சியுற்று அடியவனாகிய யான் மிகுதியாக பருகுகின்றேன். எ.று.
வளம் - ஞான வளம். அருளை அமுதம் என்கின்றாராதலால், அது நிறையும் மனத்தைக் “குளம்” என்று கூறுகின்றார். சிவஞான மணம் கமழ்வது தோன்ற, “பரிமளத்தே மிகுந்து வயங்கும்” என வுரைக்கின்றார். ஆராமை விளங்க, “மிக வுண்ணுகின்றேன்” என்று அறிவிக்கின்றார். வயங்குதல் - விளங்குதல். (3)
|