4689.

          மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
          இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
          பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
          சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.

உரை:

     பிறப்பிறப் பெய்தும் சிறுமையைப் போக்கி என்னை ஆட்கொண்டு திருவருள் அமுதத்தை எனக்கு மிகவும் அளித்த சிறப்புடைய சிவபெருமானே! அருட்பெருஞ் சோதியே! அம்பலத்தில் ஓங்கி விளங்குகின்ற செழுமையான சுடரொளியை உடையவனே! எளியவனாகிய நான் ஒருகணப் பொழுதும் உன்னை மறக்க மாட்டேன்; ஒருகால் மறப்பேனாயின் அப்பொழுதே இறந்துபடுவேன்; இது முக்காலும் சத்தியம் என்று சொல்லுகிறேன். எ.று.

     பிறப்பிறப்பில்லாத பெரிய நிலையையே அறிவுடையோர் எல்லோரும் வேண்டுவராதலின், அதனையே தானும் வேண்டினமை விளங்க, “பிறப்பே தவிர்த்து ஆட்கொண்டு” என்றும், ஆளாவதற்குத் திருவருள் ஞானம் இன்றியமையாமையாதலின் அதனை இறைவன் அருளிய நலம் பற்றி, “அமுதம் பெரிதளித்த சிறப்பே” என்றும் புகல்கின்றார். சிவனது சிறப்பு உயர்வற உயர்ந்த ஒப்பமுடையது என்றற்கு, “சிறப்பே” என்று செப்புகின்றார். மறக்க மாட்டேன் உன்னை மறந்தால் உடனே இறந்துபடுவேன் என்பதை வற்புறுத்தற்கு, “மறக்கில் அன்றே இறப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் இசைத்தேன்” என அடுக்கி மொழிகின்றார்.

     (7)