4692. நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
உரை: பூவுலகின்கண் விளங்குகின்ற அருட்பெருஞ் சோதியாகிய என் அப்பனே! என்னுடைய அருட் செல்வனே! எளியவனாகிய நான் மண்ணில் ஊர்ந்து செல்லும் புழு அல்லேன் எனினும், புல்லிய நிலத்தில் கிடக்கின்ற மலத்தின்கண் தோன்றி புழு ஒத்தவனாகிய என்னை மேலுலகிலுள்ள தேவர்கள் போற்றுகின்ற உயர்ந்த தேவர் குலத்துக்குத் தலைவனாகும் பெருமையை எனக்குத் தந்து என் உள்ளத்தின்கண் நின்று நிலவுகின்றாய்; இதனினும் வேறு பேறு எனக்கு யாதுளது. எ.று.
தலம் - நிலவுலகம். இதைப் பூதலம் என்னும் வழக்குப் பற்றித் “தலம்” என்கின்றார். தயாநிதி - அருட் செல்வம். இது தயாவாகிய நிதி என விரியும். மண்ணில் தோன்றுவனவும் மண்ணில் கிடக்கின்ற மலத்தில் தோன்றுவனவும் எனப் புழு வகை பலவாதலின், “நிலத்தே புழுத்த புழுவும் அலேன்” எனவும், “நிலத்து இழிந்த மலத்தே புழுத்த புழு” எனவும் வகுத்துரைக்கின்றார். மலத்தை எரியுமிடம் இழிந்த பகுதியாதலின், அதனைப் புன்நிலம் என்று புகல்கின்றார். வான் துதிக்கும் குலம் - வானோர்கள் போற்றுகின்ற தேவர் இனம். அவ்வான் என்றவிடத்து அகரம் உலகறிச் சுட்டு. குலவுதல் - நின்று நிலவுதல். (10)
|