4694.

          வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
          ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
          டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
          வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.

உரை:

     திருமால் பிரமன் முதலியோர் வந்து என்னை வாழ்க வென்று வாழ்த்தவும், உன்னை      அருட் பெருங் கடலே என்று துதித்துப் போற்றவும் அருள் புரிந்தாய்; என்றும் சாகா வரத்தையும் எனக்கு மனமுவந்து அளித்தாய்; இது நீடுழியாக நிலவும் அற்புதமாம்; அம்பலத்தில் உயர்ந்து விளங்குகின்ற அருட் பெருஞ் சோதியாகிய நின்னுடைய பேரருள் வாழ்க. எ.று.

     (12)