90. அடிமைப் பேறு
அஃதாவது, அடியனாகும் தன்மை பெற்ற திறத்தை கூறுதல். அடியராயினமையால் எய்திய நலங்களை எடுத்தோதுதலும் அடிமைப் பேறாகும் என அறிக. இதுவும் அந்தாதித் தொடையில் அமைந்துளது.
நேரிசை வெண்பா 4696. அருள் அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
பொருள் அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள் அளித்தான்
எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
அச்சோ எனக்கவன்போல் ஆர்.
உரை: அம்பலவாணனாகிய சிவபெருமான் எனக்குத் தன் அருளையும் அன்பையும் தந்து உண்மை ஞானமாகிய மெய்ப்பொருளையும் கொடுத்து என்னுட் கலந்தருளித் தெளிந்த உணர்வையும் நல்கியதுடன், எவ்வகைச் சோதனையையும் செய்யாமல் என்னைத் தனக்கு ஆளாகக் கொண்டானாதலால் எனக்கு அவன் போல் இனிய தலைவர் யாவருளர். எ.று.
அருள் - இறைவன் தன்பால் நல்கும் பேரன்பு. அன்பு - தமதுள்ளத்து அவன் மேலும் அவன் உறையும் பிற வுயிர்கள் மேலும் உளதாகும் அன்புள்ளம். உண்மைச் சிவஞானம் இறைவன் அருளால் உளதாவதாகலின் அதனை, “உண்மைப் பொருள் அளித்தான்” எனப் புகல்கின்றார். “அவனருளாலே அவன் றாள் வணங்கி” என மணிவாசகர் மொழிவது காண்க. தெருள் - உண்மை நிலையை உள்ளவா றுணர்ந்து தெளிதல். பல சோதனைக்கு உட்படுத்தித் தூய்மை செய்து அடிமை கொள்வது இறைவன் இயல்பாதலைத் தொண்டர் வரலாற்றால் தெரிகின்றோமாதலால், “எச்சோதனையும் இயற்றாமல் ஆண்டு கொண்டான்” என்று உரைக்கின்றார். சோதனைகளில் அகப்பட்டு வருந்தும்போது இறைவனை நொந்து கொள்ளும் நிலைக்கு அஞ்சுகின்றாராதல் விளங்க, “அச்சோ” எனவும், “எனக்கு அவன்போல் யார்” எனவும் இயம்புகிறார். (1)
|