4697. ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாம்வல்ல
செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
உரை: பூரணனும், சிற்றம்பலத்தை யுடையவனும், என் அன்புடைய அப்பனும் ஆகிய சிவபெருமான் எல்லாம் செய்ய வல்ல செம்மையான ஆற்றலை என் உள்ளத்திற் பொருத்தி, வேதங்களும் சிவாகமங்களும் ஆங்காங்கே யுரைக்கின்ற காரண காரியங்களை எனக்கு உணர்த்தி யருளினான். எ.று.
பூரணன் - எல்லா நலங்களும் நிறைந்தவன். வேதப் பொருள்களிலும் ஆகமப் பொருள்களிலும் ஆங்காங்கு எழுகின்ற ஐயங்களைக் காரண காரிய முறையில் சான்றோர் விரித்தோதி விளக்குவதைத் தாம் அறிந்து கொண்டது அவனது திருவருள் துணையால் ஆகியதெனக் கருதுகின்றாராகலின், “ஆங்காங்கு காரணமும் காரியமும் காட்டுவித்தான்” எனக் கூறுகின்றார். மூலப் பகுதியினும் உரைப் பகுதி உணர்தல் அரிது என்று கூறுவது பண்டை யாசிரியர்கள் மரபு. செம்பலம் - செம்மையே செய்யும் வலிமை. வினைத் திட்பம் மனத்திட்பத்தைச் சார்ந்ததாகலின், “என்னுளத்தே சேர்த்து” என்று கூறுகின்றார். “வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்” என்பர் திருவள்ளுவர். (2)
|