4698.

          சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண்
          பார்த்தான்என் எண்ணமெலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
          துன்பமெலாம் தூக்கமெலாம் சூழாது நீக்கிவிட்டான்
          இன்பமெலாம் தந்தான் இசைந்து.

உரை:

     அம்பலவாணனாகிய சிவபெருமான் தன் திருவடியை என் தலைமேல் வைத்தருளினான்; அருளொழுகும் தன் கண்களால் என்னை நோக்கினான்; இவ்வகையால் என்னுடைய எண்ணங்கள் யாவும் ஈடேறச் செய்தான்; என்னை வருத்திய துனபங்கள் அனைத்தையும் போக்கினான்; என்னைப் பற்றியிருந்த மயக்கத்தை என்னோடு ஆராயாமல் நீக்கி, திருவுள்ளம் இசைந்து இன்பங்கள் யாவற்றையும் எனக்குத் தந்தருளினான். எ.று.

     பதம் - திருவடி. பாலித்தல் - கைகூடச் செய்தல். தூக்கம் - ஈண்டு உலகியல் வாழ்வில் தோன்றும் மயக்கத்தின் மேல் நின்றது. தானே முன்னின்று தனது ஞானத்தால் எனக்கு உண்டாகும் மயக்கங்களையறிந்து போக்கினான் என்பாராய், “துன்ப மெல்லாம் சூழாது நீக்கி விட்டான்” என்று கூறுகின்றார். சூழ்தல் - உடனிருந்து ஆராய்தல்.

     (3)