4699. இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும்
நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு
மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என்
தாயைமகிழ் அம்பலவன் தான்.
உரை: அருட் சத்தியெனப்படும் உமாதேவியொடு கூடி மகிழும் அம்பலவாணனாகிய சிவபெருமான் மனமுவந்து என் உள்ளத்தில் இருந்தருளினான்; என்னையும் விரும்பினான்; என் பாடல்களையும் விரும்பியேற்றான்; என்னைத் தளர்வித்து வருத்தும் உலகியல் மாயையை என் மனத்தின்கண் ஒடுக்கினான்; யான் உய்ந்தேன். எ.று.
அருட் சத்தியின் வடிவம் உமாதேவி என்பவாகலின், “அருள் எனும் என் தாய்” என வுரைக்கின்றார். இசைந்தான் - முற்றெச்சம். நசைதல் - விரும்புதல்; நசையென்னும் பெயரடியாகப் பிறந்த வினை. அசைதல் - தளர்தல். முற்றவும் நீக்கப்படாது அதனிடையே வாழ வேண்டுதலின், “மாயை மனம் அடக்கி வைத்தான்” என்று கூறுகின்றார். ஓரொருகால் தோன்றி நினைப்பு மறப்புக்களால் வருத்தும் இயல்பினதாதலால், “அசைந்தாடும் மாயை” என்றும், மனத்தின்கண் உறைவ தென்பது விளங்க, “மனம் அடக்கி வைத்தான்” என்றும் இயம்புகின்றார். (4)
|