4700. தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
உரை: அம்பலவாணனாகிய சிவபெருமான் தானே அருளும் பொருளுமாயினான்; எல்லா வல்ல தலைவனும் தானே; அவன் தானே நானாயினான்; எனக்கு நாயகனும் அவனானான்; ஞானவானும் அவனே. எ.று.
அருள் விளக்கம் பொருளால் நிகழ்வது பற்றி, “தானே அருளானான் தானே பொருளானான்” என்று கூறுகின்றார். “அருளென்றும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால்” என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. தன்னையடைந்த ஆன்மாவைச் சிவமாக்கும் இயல்பு பற்றி, “தான் நானான்” என்கின்றார். ஞானவான் - ஞானமாகிய செல்வத்தை யுடையவன்; தனவான் என்பது போல. (5)
|