4703.

          ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு
          நானே களித்து நடிக்கின்றேன் - தானேஎன்
          தந்தைஎன்பால் வைத்த தயவைநினைக் குந்தோறும்
          சிந்தைவியக் கின்றேன் தெரிந்து.

உரை:

     நான் அச்சிவமாகி அவனருளால் ஆங்காங்கு நின்று மகிழ்வுடன் நடிக்கின்றேன்; அதனோடு என் தந்தையாகிய அவன் என்பால் வைத்த அருளை நினைக்கும்போது உண்மை தெரிந்து மனத்தால் வியக்கின்றேன். எ.று.

     அருள்பெற்ற மகிழ்ச்சியினால் ஆங்காங்கு நானே இயங்குகின்றேன் என்பாராய், “ஆங்காங்கு நானே களித்து நடிக்கின்றேன்” என்று நவில்கின்றார். எனது எளிமையையும் சிவனது பேரருளையும் நினைக்கும்போது தான் வியப்பில் ஆழ்ந்து விடுகின்றமை விளங்க, “தயவை நினைக்குந் தோறும் தெரிந்து சிந்தை வியக்கின்றேன்” என்று செப்புகின்றார். (8)