4704. தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று
புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச்
சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள்
நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்.
உரை: திருவருள் ஞானத்தால் சிவ பரம்பொருள் ஒன்றே யென்று தெரிந்து கொண்டேன்; சிவமாம் தன்மை கைக்கூடுமென்று பூசை செய்தேன்; விரிந்து பரந்தோடும் மனத்தின் குறும்புகளையெல்லாம் போக்கிவிட்டு எல்லாம் வல்ல சித்துக்களைச் செய்தற் கமைந்த திருவருள் ஒளி பரவிய நாடுகளை யெல்லாம் எனக்கு உரியனவாகக் கைப்பற்றிக் கொண்டேன். எ.று.
திருவருள் ஞானத்தால் சிவ பரம்பொருள் ஒன்றே யென்றறிந்து சிவப்பேறு வேண்டிப் பூசை செய்து மனச் சேட்டைகளைப் போக்கித் திருவருள் நாட்டை கைப்பற்றினேன் என்பது கருத்து. மனச் சேட்டை - குற்றம் விளைவிக்கும் குறும்புகளைச் செய்யும் மனத்தை, “விரிந்த மனச் சேட்டை” என்று கூறுகின்றார். சேட்டை - குறும்புச் செயல். அருளொளி நிலவும் பிரதேசத்தை “அருள் நாடு” என்று இயம்புகின்றார். (9)
|