4705. நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது
வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து
தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான்
அம்பலவன் தன்அருளி னால்.
உரை: அம்பலவாணனாகிய சிவபெருமான் பேரருள் கொண்டு வானுலகத்துத் தேவர்கள் எல்லாரும் என்பால் வந்து எனக்கு ஏவல் புரிந்து என்னைத் தம் இனத்தவன் என்று நன்கு மதிக்கத் தானே எழுந்தருளி என்னுட் கலந்து கொண்டான்; நான் செய்த தவத்தின் பெருமைதான் யாது என்பேன்; சொல்லுதற்கரிது. எ.று.
வானுலகத் தேவர் எல்லோரும் வந்து ஏவல் புரிந்து என்னையும் தன் இனத்தவனாக மதிக்க வைத்தது சிவனது திருவருளால் என்பதை வற்புறுத்தற்கு, “அம்பலவன் தன் அருளினால்” என்று சாற்றுகின்றார், தம்பலம் - தம்முடைய இனம். தமக்கு வலிய அரண் எனினும் பொருந்தும். (10)
|