91. உலப்பில் இன்பம்
அஃதாவது, இறைவனது இடையறாத நினைவால் எழுகின்ற கெடாத இன்பப் பெருக்கால் உளவாகின்ற இன்ப நினைவுகளைப் பாடுதல். 4706. கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே
தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே
பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்
தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.
உரை: கருணையுருவாகிய செல்வனே! அடியவனாகிய என்னுடைய இரு கண்களிலும் உள்ளவனே! தெளிவை நிலையை விரும்பும் என் மனத்தினுள் எழுந்தருளும் தேவதேவனே! மெய்ப் பொருளாளர்கள் விரும்புகின்ற சிற்றம்பலத்தில் விளங்குகின்ற புண்ணியனே! மெய்ம்மையால் இளமை நலம் உடையவனே! இதுவே சமயமாதலால் என்னைத் தாங்கி யருள்க. எ.று.
கருணாநிதி - கருணையாகிய செல்வம். ஈண்டுக் கருணையே யுருவாகிய சிவன்மேல் நின்றது. தெருள் - தெளிவுடைமை. உலகியல் மயக்கத்தின்கண் ஆழ்ந்திருக்கும் என் மனம் அது நீங்கி ஞானத் தெளிவையே நாடி நிற்பதால், “தெருள் நாடும் என் சிந்தை” எனக் கூறுகின்றார். தேவதேவன் - தேவர்களுக்குத் தேவன். பொருள் - ஈண்டு அது மெய்ப்பொருளாளர்களாகிய சிவஞானிகளுக் காயிற்று. இளமைத் திருமேனியே சிவத் திருமேனிக்கு மாண்பாதலின், “மெய்த் தருணா” என விளம்புகின்றார். தருணம் - இளமை குறித்து வந்தது. “தருணேந்து சேகரன்” என்றாற் போல. தாங்கிக்கொள் - ஏன்று கொண்டருள்க என்பது. (1)
|