4708.

          எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
          சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
          அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
          வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.

உரை:

     எந்தையாகிய சிவனே! இங்கே இப்போது நின்னைக் கண்களாற் கண்டு மகிழ்ந்தேனாதலால், மனத்தின்கண் நல்லின்பமும் உரமும் பெற்று இன்பம் மிகுகின்றேன்; அழகிய தாமரையை இருக்கை யாகவுடைய பிரமன் திருமால் முதலிய தேவர்கள் போந்து, இவ்வுலகிலே வாழ்க என்று என்னை வாழ்த்துகின்றார்கள். எ.று.

     சிந்தை - சிந்தா என வந்தது. பலம் - வலிமை. தேக்குதல் - நிறைதல். படைப்புக் கடவுளாதலால், பிரமனை “அந்தாமரையான்” என முற்பட மொழிகின்றார். தேவர்கள் வந்து வாழ்த்துவதாகக் கற்பனைக் கண்ணிற் கண்டு மகிழ்ந்துரைக்கின்றார் எனக் கொள்க. (3)